கோலாலம்பூர், 02 ஜூன் 2026 : உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடி மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களின் தாக்கம் காரணமாக, உயர்திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்ட பணியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் 2026 ஏப்ரல் மாத Malaysia Economic Monitor அறிக்கையை மேற்கோள்காட்டிய அவர், மலேசியாவின் தற்போதைய சவால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் தொழிலாளர்களின் திறன்களுடன் பொருந்துவதையும், அதிக உற்பத்தித்திறனையும், உயர்ந்த வருமானத்தையும் வழங்குவதையும் உறுதி செய்வதாகும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உயர்மதிப்புடைய தொழில்துறைகளில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் (TVET) மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.
மலேசியாவின் எதிர்கால திறன்வள மேம்பாட்டிற்காக, மனிதவள அமைச்சு TalentCorp வழியாக MyMahir, Future Skills Talent Council (FSTC), Critical Occupations List (MyCOL) மற்றும் AI Readiness Index (AIRI) போன்ற திட்டங்களை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டங்கள் தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப திறன்களை உருவாக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
மேலும், கல்வி அமைச்சுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு TVET, STEM, டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர்திறன் துறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது எதிர்கால கல்வி மற்றும் தொழில் தேர்வுகளை சிறப்பாக திட்டமிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு பொருத்தத்தை மேம்படுத்த MyFutureJobs போன்ற தளங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதுடன், உள்ளூர் திறமைகளை உயர்தர மற்றும் அதிக வருமானம் தரும் வேலைவாய்ப்புகளுடன் இணைக்கும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் விநியோக நெருக்கடிகளுக்கு மத்தியில், மலேசிய தொழிலாளர்கள் போட்டித்திறன் மிக்கவர்களாக உருவாகுவதற்கான திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத் தயார்நிலை மிக முக்கியமானதாக மாறியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.






