17 ஜூலை 2026 : தலைமைத்துவத்தின் அடித்தளம் என்பது தாம் அடைந்துள்ள சாதனைகளில் விரைவாக திருப்தியடையாமல், தொடர்ந்து தம்மை மேம்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையில்தான் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நிலை தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன (IPG Kampus Pendidikan Teknik Nilai) மாணவர்களுடனான “தேமு அன்வார் பெர்சாமா பெலாஜார்” (Temu Anwar Bersama Pelajar) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றுவதுடன், அறிவு, பண்பாடு, வழிபாடு, கற்பித்தல் முறைகள் மற்றும் பணித்திறன் ஆகிய அனைத்திலும் தொடர்ந்து தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ‘இத்கான் ஃபில் அமல்’ (Itqan fil ‘Amal) என்ற கொள்கையை வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள் என்பது வெறும் அறிவைப் பகிர்ந்து கொடுப்பவர்களாக மட்டுமல்லாமல், எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மற்றும் தங்களது திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், ஆசிரியர்களும் எதிர்கால தலைவர்களும் புதுமைகளை உருவாக்கத் துணிவுடன் செயல்பட வேண்டும் என்றும், புதிய திறன்களை கற்றுக்கொள்வதுடன், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இன்றைய இளைஞர்களிடம் மாற்றத்தை வழிநடத்தும் திறன் அதிகமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர், அந்த ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர அறிவு மற்றும் திறன்களில் தேர்ச்சி பெறுவதுடன், தொழில்துறையுடன் நெருக்கமான ஒத்துழைப்பையும், தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்ற உறுதியான மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.






