கோலாலம்பூர், 17 ஜூலை 2026 : கோலாலம்பூர்: மலேசிய சர்வதேச உணவு மற்றும் பான வர்த்தகக் கண்காட்சி (MIFB) 2026-இல் இந்தியாவின் உணவு மற்றும் பானத் துறையின் தரம் மற்றும் பல்வகை தயாரிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரங்கம் (India Pavilion) திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவின் மலேசியாவிற்கான இடைக்கால தூதரகப் பொறுப்பாளர் (Charge d’Affaires a.i.) ஹிதேஷ் ராஜ்பால், முதல் செயலாளர் (வர்த்தகம்) டாக்டர் விவேகானந்த் முன்னிலையில் இந்திய அரங்கை திறந்து வைத்தார்.
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) ஏற்பாடு செய்த இந்த அரங்கில், இயக்குநர் நிர்மலா டெட்டே தலைமையில் இந்தியாவின் 30 நிறுவனங்கள் பங்கேற்று, உயர்தர உணவு மற்றும் பானப் பொருட்களை காட்சிப்படுத்தின.
கண்காட்சியின்போது, ஹிதேஷ் ராஜ்பால் பங்கேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை பார்வையிட்டதுடன், இந்தியா–மலேசியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார்.
இந்திய நிறுவனங்களை சர்வதேச சந்தையில் ஊக்குவிப்பதற்கும், இந்தியா–மலேசியா இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்திய உயர் ஆணையம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






