சென்னை, 02 ஜூன் 2026 : தேசிய ஒற்றுமைத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், தனது சென்னைப் பயணத்தின் போது கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
தமிழக அரசின் முக்கிய நவீன பொது நூலகங்களில் ஒன்றாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தப் பயணம் தனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாக யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
மலேசிய தேசிய நூலகத்தைப் போலவே இந்த நூலகமும் அரசாங்கத்தின் கீழ் இயங்குவதால், இந்த வருகை வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக இல்லாமல், அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் முக்கிய வாய்ப்பாக அமைந்ததாக அவர் கூறினார்.
மேலும், மலேசியா மற்றும் இந்தியாவின் தமிழ் சமூகங்களுக்கிடையேயான கலாச்சார மற்றும் அறிவுசார் உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய தளமாகவும் இந்த சந்திப்பு அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.



அண்ணா நூற்றாண்டு நூலகம் இலட்சக்கணக்கான நூல்கள், நவீன வாசிப்பு வசதிகள், மின்னணு வளங்கள், அரங்கங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான இடங்களை உள்ளடக்கியதோடு, தமிழர் அறிவு மரபின் பெருமையையும் வெளிப்படுத்துவதாக அவர் பாராட்டினார்.
குறிப்பாக ஓலைச்சுவடிகள் வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ள அரிய தமிழ் பாரம்பரியச் சுவடிகள், பண்டைய தமிழ் சமூகத்தின் உயர்ந்த அறிவுத்திறன் மற்றும் நாகரிக வளர்ச்சிக்கான சான்றுகளாக விளங்குகின்றன என்றார். இலக்கியம், மருத்துவம், வானியல், தத்துவம், மதம், கட்டிடக்கலை மற்றும் வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அறிவு தலைமுறைகள் கடந்து பாதுகாக்கப்பட்டு இன்றும் நிலைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“நூலகம் என்பது புத்தகங்களை சேமித்து வைக்கும் இடம் மட்டுமல்ல. அது ஒரு தேசத்தின் நினைவுகளைக் காக்கும் பொக்கிஷமாகவும், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் கலாச்சாரப் பாலமாகவும் விளங்குகிறது,” என்று அவர் கூறினார்.
மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான அறிவு, கலாச்சாரம் மற்றும் வரலாற்று தொடர்புகள் எதிர்காலத்திலும் மேலும் வலுப்பெற்று, இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.






