கோலாலம்பூர், 01 ஜூன் 2026 : மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் 2026 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு, 161 பேருக்கு கூட்டரசின் உயரிய விருதுகள், பதக்கங்கள் மற்றும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களின் பட்டியலில் தலைமை நீதிபதி வான் அகமது பாரிட் வான் சாலே முதலிடத்தில் இடம்பெற்றார். அவருக்கு செரி செத்தியா மகுடா (SSM) விருது வழங்கப்பட்டதுடன், ‘துன்’ என்ற உயரிய பட்டமும் வழங்கப்பட்டது. தேசிய சைக்கிள் ஓட்ட வீரரான டத்தோ முகமது அசிசுல்ஹஸ்னி அவாங்கிற்கு தார்ஜா பக்தி (DB) விருது வழங்கப்பட்டது.
மலேசிய ஆயுதப்படைத் தளபதி மாலேக் ரசாக் சுலைமான், காவல்துறைத் தலைவர் முகமது காலிட் இஸ்மாயில் மற்றும் கன்ட்ரி கார்டன் பசிபிக்வியூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் டாயிங் அப்துல் மாலெக் ஆகிய மூவருக்கு பங்க்லிமா மாங்கு நெகாரா (PMN) விருது வழங்கப்பட்டு ‘தான் ஸ்ரீ’ பட்டம் அளிக்கப்பட்டது.
மேலும், கருவூலத்தின் தலைமைச் செயலாளர் ஜோஹான் மக்மூட் மெரிக்கான், தரைப்படைத் தளபதி அஸ்ஹான் மத் ஒத்மான், விமானப்படைத் தளபதி முகமது நோராஸ்லான் ஆரிஸ் மற்றும் யயாசான் சுல்தான் இப்ராஹிம் ஜொகூர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அவிந்தர்ஜித் சிங் உள்ளிட்ட ஐந்து பேருக்கு பங்க்லிமா செத்தியா மகுடா (PSM) விருது வழங்கப்பட்டு ‘தான் ஸ்ரீ’ பட்டம் அளிக்கப்பட்டது.
அத்துடன், PJN, PSD, JMN, JSM, JSD, KMN, KSD, AMN, PPN மற்றும் BSD உள்ளிட்ட பல்வேறு கூட்டரசு விருதுகளும் பல துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டன.
நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு, விளையாட்டு மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






