கோலாலம்பூர், 29 மே 2026 : மலேசியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வந்த ‘கொன்ஸ்பிராசி’ (Konspirasi) திரைப்படத்தின் திரையிடல் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையின்பேரில் நிறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (FINAS) உறுதிப்படுத்தியுள்ளது.
FINAS வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் குறித்து மலேசிய திரைப்பட காட்சியக சங்கம் (MAFE) மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான மீடியா பிரைமா பெர்ஹாட் மூலம் தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, Elepfilm Entertainment Sdn. Bhd. நிறுவனம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கோரிக்கையின் அடிப்படையில், மே 28 முதல் திரைப்படத்தின் திரையிடலை நிறுத்துமாறு அறிவித்திருந்தது.
திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு நிர்வாகங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த முடிவு தயாரிப்பாளர் தரப்பின் வேண்டுகோளின் பேரிலேயே எடுக்கப்பட்டதாகவும், எந்த அரசாங்க அமைப்போ அல்லது அதிகாரப்பூர்வ அமைப்போ இதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும் FINAS விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ‘கொன்ஸ்பிராசி’ திரைப்படம் மலேசிய திரைப்பட தணிக்கைக் குழு (LPF) அனுமதியை பெற்ற பின்னரே கட்டாய திரையிடல் திட்டத்தின் கீழ் மே 14 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டதாக FINAS தெரிவித்துள்ளது. திரைப்படம் மே 21 அன்று நாடு முழுவதும் 120 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தொடர்பான விசாரணை மற்றும் அரசியல் சதிகளை மையமாகக் கொண்ட அதிரடி கதைக்களத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது. வெளியான சில நாட்களிலேயே திரையிடல் திடீரென நிறுத்தப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், திரைப்படத்தின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சாரிமா இப்ராஹிம் சமூக ஊடகங்களில் தனது அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
FINAS, இந்த முடிவுக்கான விரிவான விளக்கத்தைப் பெற தயாரிப்பு நிறுவனத்தை தொடர்புகொள்ள முயற்சித்து வருவதாகவும், இதுவரை நேரடி பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
திரைப்படத்தை காஸ் அபு பக்கார் இயக்கியுள்ளதுடன், ஆடி புத்ரா, ஹிஷாம் ஹமீட், அலிசியா அமின், ஷிகின் கமால், எஸ்மா டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.




