என் தமிழ்

ஹரிராயா ஹஜ் நீண்ட விடுமுறை : தினமும் 1.5 இலட்சத்திற்கும் அதிக வாகனங்கள் WCE-யை பயன்படுத்தும் என எதிர்பார்ப்பு

ஷா ஆலம், 26 மே 2026 : ஹரிராயா ஹஜ் மற்றும் நீண்ட பள்ளி விடுமுறையை முன்னிட்டு, மேற்குக் கரை விரைவுச்சாலை (WCE) வழியாக தினமும் 1.5 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக WCE நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதும், விடுமுறை பயணங்கள் அதிகரிப்பதும் காரணமாக இந்த போக்குவரத்து உயர்வு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக WCE நிர்வாகம் விளக்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், அவசர பராமரிப்பு பணிகளைத் தவிர்த்து அனைத்து சாலைப் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலை முழுவதும் முக்கிய பகுதிகளில் இழுவை வாகனங்கள், அவசர உதவி குழுக்கள் மற்றும் ரோந்து பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை விபத்துகள் அல்லது வாகனக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடி உதவி வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள், WCE-யின் புதிய மொபைல் செயலியை பயன்படுத்தி நேரடி போக்குவரத்து தகவல்கள், செயற்கை நுண்ணறிவு (AI) உதவி, வழித்தட வழிகாட்டி மற்றும் ஓய்வு மைய விவரங்களைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனுடன், Touch ‘n Go PayDirect வசதி அனைத்து சுங்கச்சாவடிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆறு ஓய்வு மற்றும் சேவை மையங்கள் (R&R) மற்றும் பல வசதிகள் பயணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM) வெளியிட்ட தகவலின்படி, ஹரிராயா ஹஜ் காலப்பகுதியில் நாடு முழுவதும் தினசரி சுமார் 3.3 மில்லியன் வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது

Scroll to Top