சிலாங்கூர், 25 மே 2026 : ஸ்ரீ செந்தோஷ அருள் நிலையம் ஏற்பாடு செய்திருந்த சித்திரை விழா 2026 நிகழ்ச்சி, போர்ட் கிளாங்கிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலேசியா ஹிந்துதர்ம மாமன்றமும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியது.
மே 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகளை கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது.
நிகழ்ச்சியில் கோலப் போட்டி, தோரணம் கட்டும் போட்டி, வண்ணப் போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் சமூக ஒற்றுமை, பாரம்பரிய விழிப்புணர்வு மற்றும் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ செந்தோஷ அருள் நிலையம் நடத்திய முதல் நிகழ்வாக இது அமைந்திருந்தது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அமைப்பின் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் மலேசியா ஹிந்துதர்ம மாமன்றம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தது.
மேலும், நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் இது ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஐயா ரிஷிகுமார் வடிவேலோ, ஐயா ஜி.கே. நடராஜன், ஐயா டத்தோ முருகேசு, ஐயா கார்த்திகேசு மற்றும் ஐயா சந்திரகணேஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.








