புத்ரஜெயா, 25 மே 2026 : மதானி அரசாங்கத்தின் “MADANI Bekerja” எனப்படும் வாராந்திர முன்னெடுப்பு திட்டம், மே 18 முதல் 24 வரை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், மக்களின் நலனை மேம்படுத்தவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த வார முன்னெடுப்புகளில் டிஜிட்டல் முதலீடுகள், TVET கல்வி மேம்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் நிலையான விநியோகம் மற்றும் குறிவைக்கப்பட்ட உதவித் திட்டங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன.
அரசாங்கம் BUDI MADANI டீசல் உதவித் திட்டத்தின் கீழ் மாதம் RM300 மற்றும் இடைக்கால RM100 உதவித் தொகையை தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், SKDS டீசல் மானியத் திட்டம் நாடு முழுவதும் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
அதேவேளை, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில் TVET மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு புதிய திறன்களை வழங்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மைக்ரோ கடன் வசதிகளை சிறு வணிகர்களுக்கு எளிதாக வழங்க பிரதமர் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் நேரடியாக களமிறங்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சு உலகளாவிய எபோலா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு அவசர சுகாதார கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மதானி அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகள், பொருளாதார நிலைத்தன்மை, சமூக நலன் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.





