24 மே 2026 : மலேசியர்கள் தடையற்ற டிஜிட்டல் குடிவரவு சேவைகளைப் பெறுவதற்காக தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு செயலியான “MyNIISe”-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களது பதிவு செயல்முறையை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயில் தெரிவித்ததாவது, குடிவரவு தொடர்பான பல்வேறு முக்கிய சேவைகளை பொதுமக்கள் இனி நேரடியாக தங்களது ஸ்மார்ட்போன் மூலமாக மேற்கொள்ளும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதன் மூலம் சிக்கலான நடைமுறைகள், நீண்ட நேர காத்திருப்பு மற்றும் அலுவலகங்களுக்கு நேரில் செல்வது போன்ற சிரமங்கள் குறைக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிவரவு சேவைகளை மேலும் விரைவாகவும் திறமையாகவும் வழங்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
MyNIISe செயலி வழியாக குடிவரவு தொடர்பான விண்ணப்பங்கள், தகவல் சரிபார்ப்பு மற்றும் பல்வேறு சேவைகளை எளிதாக அணுக முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி, நாட்டின் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.





