என் தமிழ்

சியோலில் இந்திய போர் நினைவிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

சியோல், 22 மே 2026 : தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அமைந்துள்ள இம்ஜிங்காக் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய போர் நினைவிடத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

கொரியப் போரின் 75ஆம் ஆண்டு நினைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நினைவிடம், போரின்போது இந்திய ராணுவத்தின் 60 பாரா பீல்டு ஆம்புலன்ஸ் பிரிவு மற்றும் இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரத் தியாகம், மனிதாபிமான சேவை மற்றும் அமைதிப் பணிகளை கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிட திறப்பு விழாவில், தென் கொரியாவின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தேசபக்தர்கள் நலத்துறை அமைச்சர் குவான் ஓ யூல் இணைந்து கலந்துகொண்டார். இரு நாட்டு அமைச்சர்களும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், கொரிய தீபகற்பத்தில் அமைதி, மனிதாபிமான உதவி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இந்தியா மற்றும் தென் கொரியாவுக்கிடையேயான வரலாற்று உறவுகளும் தியாகங்களும் இருநாடுகளின் உத்திசார்ந்த கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கொரியப் போரில் பங்கேற்ற இந்திய வீரர்களை கௌரவிக்கும் வகையில் இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top