என் தமிழ்

இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி : ரோம் நகரில் உற்சாக வரவேற்பு

ரோம், 20 மே 2026 : ஐரோப்பிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி தலைநகர் ரோம் நகரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில், இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து, ரோம் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, இத்தாலிய கலைஞர்கள் இந்திய கலாசார நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பு வரவேற்பளித்தனர்.

இந்தப் பயணத்தின் போது, இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டாரெல்லா மற்றும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியா–இத்தாலி உறவை “சிறப்பு மூலோபாய கூட்டாண்மை” நிலைக்கு உயர்த்தும் கூட்டு அறிவிப்பும் இந்தச் சந்திப்பில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top