பெட்டாலிங் ஜெயா, 16 மே 2026 — இந்தியாவின் மகாகவி குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 165வது பிறந்த நாள் விழா, “தாகூர் விழா – வங்காளக் கவிஞருக்கு ஓர் அஞ்சலி” என்ற பெயரில் மலேசிய இந்திய பாரம்பரிய சங்கம் (MIHS) மற்றும் மலேசிய பெங்காலி சங்கம் (MBA) இணைந்து பெட்டாலிங் ஜெயாவில் சிறப்பாக நடத்தியது.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகரகமும் பங்கேற்றது. MIHS தலைவர் பிரபாகரன் நாயர் தொடக்க உரையாற்றிய நிலையில், இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஹிதேஷ் ராஜ்பால் விழாவின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தனது உரையில், ரவீந்திரநாத் தாகூரின் உலகளாவிய மனிதநேயக் கருத்துகளை அவர் எடுத்துரைத்தார். மேலும், தாகூர் அன்றைய மலாயாவிற்கு மேற்கொண்ட வருகையின் வரலாற்றுப் பின்னணி மற்றும் இந்தியா – மலேசியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.



அதேவேளை, தாகூரின் இலக்கிய மற்றும் கலாசார பாரம்பரியத்தை மலேசியாவில் தொடர்ந்து பாதுகாத்து வரும் MIHS மற்றும் MBA அமைப்புகளின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, குருதேவின் பேரன் வழி உறவினரான பேராசிரியர் டாக்டர் சரணிந்திரநாத் தாகூர், “ரவீந்திரநாத் தாகூரின் மனிதநேயம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில் தாகூரின் சமூக மற்றும் அரசியல் சிந்தனைகளின் தற்போதைய பொருத்தம் குறித்து விரிவாக பேசப்பட்டது. மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ரெக்டர் பேராசிரியர் எமெரிடஸ் டத்தோ டாக்டர் ஒஸ்மான் பக்கர் கலந்துரையாடலை வழிநடத்தினார்.
மேலும், The Sun பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் MIHS உறுப்பினருமான ஹிமான்ஷு பட், தாகூரின் “The River Stairs” நாடகத்தின் நாடக வாசிப்பை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து “தேஷ் ஓ பிரகிருதி, ரவீந்திரநாதர் அலோகே” (தேசமும் இயற்கையும் – தாகூரின் ஒளியில்) என்ற தலைப்பில் மலேசிய பெங்காலி சங்கம் ஏற்பாடு செய்த கலாசார நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஆலோசகர் நவீன் குமார் ராமகிருஷ்ணா, இளம் தலைமுறையினரிடம் தாகூரின் இலக்கியம், இசை மற்றும் தத்துவத்தை பரப்புவதில் MBA மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டினார். MBA தலைவர் ஜெயந்த குமார் சென் குப்தா மற்றும் பேராசிரியர் டாக்டர் சரணிந்திரநாத் தாகூர் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, “தாகூரின் பார்வையில் தென்கிழக்கு ஆசியா” என்ற தலைப்பில் தாகூரின் வாழ்க்கை, படைப்புகள், அரிய புகைப்படங்கள் மற்றும் மலாயா வருகைகளை பிரதிபலிக்கும் கண்காட்சியும் இடம்பெற்றது. இந்தக் கண்காட்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.








