லாஸ் ஏஞ்சல்ஸ், 14 ஆகஸ்ட் 2026 : பாடகியும் நடிகையுமான செலினா கோமஸுக்கு எதிராக முதலீட்டாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர் இணைந்து தொடங்கிய மனநல நிறுவனமான Wondermind Global தொடர்பாக மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Wondermind நிறுவனம், மக்களின் “மனநலத் திறனை” மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், செலினா கோமஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவராக செயல்பட்டு, தனது மிகப்பெரிய சமூக ஊடகப் பின்தொடர்பாளர் எண்ணிக்கையைப் பயன்படுத்தி நிறுவனத்தை வளர்ப்பார் என தங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், ஆனால் செலினா கோமஸ் மற்றும் நிறுவனத்தின் மற்ற நிர்வாகிகள் தாங்கள் எதிர்பார்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிறுவனத்திற்காக மொபைல் செயலி உருவாக்கப்படவில்லை என்றும், ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கான பணம் உள்ளிட்ட அடிப்படை நிறுவனப் பொறுப்புகள் கூட முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் உண்மையான நிலை குறித்து தங்களுக்கு தெரியவில்லை என்றும், 2025 செப்டம்பரில் வெளியான செய்தி அறிக்கையின் மூலம் நிறுவனத்தின் பிரச்சினைகள் குறித்து அறிந்ததாகவும் முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். டெலாவேர் மாகாணத்தின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் முதலீடு செய்த தொகையையும் சட்டச் செலவுகளையும் திரும்பப் பெற வேண்டும் என முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செலினா கோமஸின் பிரதிநிதியிடம் கருத்து கேட்கப்பட்ட போதிலும், உடனடியாக பதில் கிடைக்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.





