கோலாலம்பூர், 12 மே 2026 : மலேசியர்களின் தேசிய அடையாள அட்டையான MyKad-இன் புதிய வடிவமான “MyKAD 2026” ஜூன் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய பதிவுத் துறை (JPN) அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய MyKad, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடையாள மோசடிகளைத் தடுக்கவும், எல்லை தாண்டிய குற்றங்களை கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை குறைக்கவும் இந்த புதிய அடையாள அட்டை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய MyKad-இல் 23 பாதுகாப்பு அம்சங்கள் உள்ள நிலையில், புதிய MyKAD 2026-இல் மொத்தம் 53 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் தேசிய அடையாள அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்த அரசாங்கம் இலக்குவைத்துள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்களாக லேசர் எழுத்து (Tulisan Laser), அல்ட்ரா வைலட் பாதுகாப்பு (Ultraungu), ஹோலோகிராம், Guilloche வடிவமைப்பு, மைக்ரோ உரை (Teks Mikro) மற்றும் QR குறியீடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை தேசிய பதிவுத் துறை வெளியிட்டுள்ள நிலையில், MyKAD 2026 அறிமுகம் நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் அடையாள மேலாண்மை அமைப்பில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.





