என் தமிழ்

மாணவர்கள் மாற்றத்திற்கான சக்தியாக திகழ வேண்டும் – பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், 11 மே 2026 : மாணவர்கள் அறிவு, நல்லெண்ணம் மற்றும் முதிர்ந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் மாற்ற சக்திகளாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இனம், மதம் மற்றும் பின்னணி பேதமின்றி மக்களை ஒன்றிணைக்கும் புதிய தலைமுறை சக்தியாக மாணவர்கள் திகழ வேண்டியது அவசியம் என்றும், சமூக ஒற்றுமையை பாதிக்கும் குறுகிய இனவாத அரசியலை நிராகரிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் எதிர்காலம், இனவாத அரசியல் சுவர்களை உடைத்து, ஒன்றுபட்ட, நிலையான மற்றும் முன்னேற்றமிக்க நாட்டை உருவாக்க இளைஞர்கள் காட்டும் துணிச்சல் மற்றும் தயார்பாட்டின்மீதே அமைந்துள்ளது என பிரதமர் கூறினார்.

மேலும், இன அல்லது சமூக பின்னணி எதுவாக இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்யும் சமூக நீதிக் கொள்கையை MADANI அரசாங்கம் தொடர்ந்து காக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். “மலேசியா MADANI” கொள்கை, கருணை, நீதி மற்றும் மக்களின் நலன் ஆகிய உயரிய மதிப்புகளை முன்னிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்துகளை, மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரதமரின் இந்திய மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

அதே நிகழ்வில், மலேசிய இந்தியர் மாற்று அலகான (MITRA) மித்ராவிற்கு கூடுதலாக RM50 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்தார். இதன் மூலம், இந்த ஆண்டிற்கான மொத்த ஒதுக்கீடு RM150 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த நிதி, வறுமை மற்றும் பின்தங்கிய நிலைமையில் உள்ள மலேசிய இந்திய சமூகத்தினரை மேம்படுத்தவும், அவர்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top