என் தமிழ்

மாநிலம் முழுவதும் உருவாகும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு படை

சென்னை, 11 மே 2026 : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு படை முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுப்பதையும், பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த படை உருவாக்கப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போதுமான பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் இந்த சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகள் மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்களை தடுக்கவும், புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த படை செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதோடு, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த திட்டத்திற்கு விஜய் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top