கோலாலம்பூர், 11 மே 2026 : கோலாலம்பூரில் அமைந்துள்ள பிரபலமான ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலின் 133ஆம் ஆண்டு திருவிழா இன்று பக்தர்கள் திரளுடன் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு காலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற மகேஷ்வர பூஜைக்கு பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டும், கடந்த ஆண்டைப் போலவே, ஜசெக தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் தனது துணைவியாருடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அவருடன் சிறப்பு அதிகாரி சுரேஸ் சுங், பத்திரிகை செயலாளர் கபிலன், தமிழ் பிரிவு பத்திரிகை அதிகாரி சந்திரகலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


விழாவின் போது, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் அவரது துணைவியாருக்கு பொன்னாடை அணிவித்து மாலை சூட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், அன்னையர் தினத்தை முன்னிட்டு விழாவில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பின்னர், அன்னையர்களுடன் இணைந்து அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேக் வெட்டி கொண்டாடினார்.
இதற்கிடையில், கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கியுள்ள புதிய இடத்தில் நடைபெற்று வரும் கோவில் கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். அப்போது, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவில் தலைவர் பார்த்திபன் அமைச்சருக்கு விளக்கம் அளித்தார்.






