சென்னை, 08 மே 2026 : தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் ஆதரவுடன் அதன் பலம் 112 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இன்னும் கிடைக்காத சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில், த.வெ.க. தலைவர் விஜய், தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைப்பு வழங்க முடியாது என்று ஆளுநர் தெளிவுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் த.வெ.க. ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கட்சிகள் இன்று முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மற்றொரு புறம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தனித்தனியாக தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டுள்ள கட்சியின் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் தொடர்ந்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெறும் த.வெ.க. கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முடிவுகள் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என பார்க்கப்படுகிறது.





