சென்னை, 07 மே 2026 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா நாளை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பில், சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், விஜய் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பதவியேற்பு விழாவிற்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இருக்கைகள் சீரமைப்பு, மின் விளக்குகள் பொருத்துதல், அகன்ற திரைகள் மற்றும் ஒலிப்பெருக்கி அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, 2006ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது ஐந்தாவது பதவியேற்பு விழாவை இதே ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தியிருந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே அரங்கில் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





