என் தமிழ்

27வது தேசிய ஒலிம்பிக் அகாடமி அமர்வு கோலாலம்பூரில் தொடக்கம்

கோலாலம்பூர்,  06 மே 2026 : மலேசிய தேசிய ஒலிம்பிக் கழகத்தின் கல்வி மற்றும் பயிற்சிக் குழுவின் ஏற்பாட்டில், இளம் ஒலிம்பிக் தூதர்களுக்கான 27வது தேசிய ஒலிம்பிக் அகாடமி அமர்வு இன்று கோலாலம்பூரிலுள்ள சன்வே நகரில் அமைந்துள்ள சன்வே லாகூன் ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மே 5 முதல் 8 வரை நடைபெறும் இந்த நான்கு நாள் நிகழ்ச்சியில், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, லாவோஸ், மாலத்தீவு, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், கொரியா, திமோர்-லெஸ்டே, தாய்லாந்து, சீன தைபே மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 13 தேசிய ஒலிம்பிக் கழகங்களைச் சேர்ந்த 38 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனுடன், மலேசிய தேசிய ஒலிம்பிக் கழகத்துடன் இணைந்துள்ள 12 தேசிய விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். வில்வித்தை, பூப்பந்து, பேஸ்பால், நடன விளையாட்டு, கோல்ஃப், கபடி, லான் பவுல்ஸ், முய்தாய், பாய்மரப் படகோட்டம், ஸ்குவாஷ், டேக்வாண்டோ மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் இதில் இடம்பெற்றனர்.

வரவேற்புரையாற்றிய கல்வி மற்றும் பயிற்சிக் குழுத் தலைவர் மொய்ரா சியூ சீ டான், பல்வேறு நாடுகளிலிருந்து வந்த இளம் ஒலிம்பிக் தூதர்களை வரவேற்று, ஒலிம்பிக் இயக்கத்தின் முக்கிய மதிப்புகளான சிறப்பு, மரியாதை மற்றும் நட்பு ஆகியவற்றை இந்த நிகழ்ச்சி முழுவதும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த ஆண்டு தேசிய ஒலிம்பிக் அகாடமி அமர்வை நடத்த சன்வே குழும நிறுவனங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சன்வே நகரின் நவீன வசதிகள் நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சன்வே குழும நிறுவனங்களின் தலைவர் அலுவலக இயக்குநர் அலெக்சாண்டர் நதுஷ் மற்றும் சன்வே விருந்தோம்பல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் காஸ்டால்டி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொடக்க விழாவை மலேசிய தேசிய ஒலிம்பிக் கழகத்தின் துணைத் தலைவரும் முன்னாள் தேசிய நீச்சல் வீராங்கனையுமான நூருல் ஹுதா அப்துல்லா ஓலி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

அவர் தனது உரையில், “ஆசியாவில் ஒலிம்பிக் இயக்கத்தின் எதிர்காலம் நீங்கள் தான். இந்த அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் நட்புடனும் செயல்படுங்கள்,” என இளம் ஒலிம்பிக் தூதர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதன் பின்னர், இளம் ஒலிம்பிக் தூதர்களுக்காக பண்டார் உத்தமாவில் உள்ள மிலோ நிறுவனத்திற்கு சிறப்பு கல்விப் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு மிலோ நிறுவனத்தின் விளையாட்டு சந்தைப்படுத்தல் மேலாளர் கெர்வின் லிம், 1956 முதல் மலேசியாவில் ஒலிம்பிக் இயக்கத்துடன் மிலோ கொண்டிருக்கும் உறவு குறித்து விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் கோம்பாக்கிலுள்ள பத்து குகைகளுக்கும் கலாச்சாரப் பயணம் மேற்கொண்டனர். அங்கு 272 படிகளை உற்சாகத்துடன் ஏறிய இளம் ஒலிம்பிக் தூதர்கள், மலேசியாவின் பாரம்பரிய சிறப்புகளையும் அனுபவித்தனர்.

இவ்வாறு, பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்த இந்த ஒலிம்பிக் அகாடமி அமர்வு, விளையாட்டு, நட்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் முக்கிய தளமாக அமைந்துள்ளது.

Scroll to Top