என் தமிழ்

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி: மலேசியாவுக்கு பதக்கம்

சன்யா, 06 மே 2026 : 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் சன்யா 2026-இல், மலேசியக் குழு தனது முதல் பதக்கத்தை வென்று முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. போட்டியின் ஆறாவது நாளில் நடைபெற்ற செயிலிங் ஆப்டிமிஸ்ட் ஆண்கள் பிரிவில், முஹம்மது யாசின் ஷஹ்ரிசான் வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

ஹைஹாங் சதுக்கக் கடற்கரையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பத்து பந்தயங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தாய்லாந்து வீரர்களுக்குப் பின்னர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதே பிரிவில் மலேசியாவின் கைருல் இல்சானி முகமது அஃபெண்டி ஒன்பதாவது இடத்தைப் பெற்றார்.

பெண்கள் ஆப்டிமிஸ்ட் பிரிவில், லிடியா ஹன்னா ஜாஸ்மின் லுக்மான் மற்றும் மியா அஸ்ரானியா முகமது அஸ்ரால் ஆகியோர் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மியா அஸ்ரானியா மொத்தப் புள்ளிகளில் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

ILCA4 பிரிவில், நூர் ஹஃபிஸானா ஸைலான் பெண்கள் பிரிவில் மொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பெற்றார். சாரா அமண்டா முகமது நூர் அஸ்மான் ஆறாவது இடத்தைப் பிடித்தார். ஆண்கள் பிரிவில், முகமது அய்மான் அகீல் முகமது ஃபிர்தாஸ் எட்டாவது இடத்திலும், முகமது ஹில்ஃபி நஃபாயில் முகமது ஹஸ்ரிஸான் பத்தாவது இடத்திலும் தங்களது போட்டிப் பயணத்தை நிறைவு செய்தனர்.

ஃபாயில் விண்ட்சர்ஃபிங் பிரிவில், மார்செல்லா வில்சன் வில்லசெரன் பெண்கள் பிரிவில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். ஆண்கள் பிரிவில் முகமது ஹஃபிஸின் மன்சூர் மற்றும் முகமது யூஸ்ரி ஷஹ்ரிஸான் ஆகியோர் முறையே 10 மற்றும் 11வது இடங்களில் நிறைவு செய்தனர்.

இதற்கிடையில், சான்யா விளையாட்டு மையத்தில் நடைபெற்ற 3×3 கூடைப்பந்துப் போட்டியில் மலேசிய மகளிர் அணி காலிறுதியில் சிங்கப்பூரிடம் 15-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆடவர் அணியும் போட்டியை நடத்திய சீனாவிடம் 22-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

செய்லிங் ஆப்டிமிஸ்ட் ஆண்கள் பிரிவில் கிடைத்த வெண்கலப் பதக்கம், இந்த ஆண்டைய ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் ஒரே பதக்கமாக அமைந்தது.

மலேசியக் குழு, ஒலிம்பிக் இயக்கத்தின் துணைத் தலைவரும் குழுத் தலைவருமான மகாகுரு டத்தோ டாக்டர் சோங் கிம் ஃபாட் தலைமையில், ஏப்ரல் 30 அன்று நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளது.

Scroll to Top