டோக்கியோ, 05 மே 2026 : ஜப்பானில் 15 வயதிற்குக் குறைவான குழந்தைகள் மக்கள் தொகை தொடர்ந்து 45வது ஆண்டாக குறைந்துள்ளதாக அரசின் சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி, குழந்தைகள் எண்ணிக்கை சுமார் 13.29 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 3.5 லட்சம் குறைவாகும்.
இந்த எண்ணிக்கை 1950ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் குழந்தைகள் விகிதமும் 10.8 சதவீதமாகக் குறைந்து, இதுவும் வரலாற்றிலேயே குறைந்த அளவாக பதிவாகியுள்ளது.
குழந்தைகள் மக்கள் தொகை குறைவு தொடர்ந்து நீடித்து வருவது, நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதைக் காட்டுகிறது. ஆண் குழந்தைகள் சுமார் 6.81 மில்லியனாகவும், பெண் குழந்தைகள் 6.48 மில்லியனாகவும் உள்ளனர். வயது அடிப்படையில் பார்க்கும்போது, அதிக வயதுப் பிரிவுகளில் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகவும், பிறப்பு குறைவதால் இளம் வயதுப் பிரிவுகளில் குறைவாகவும் இருப்பது தெளிவாகிறது.
பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு பல்வேறு நிதி உதவிகள் மற்றும் குடும்ப ஆதரவு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், இந்த சரிவு தொடர்ந்துவருகிறது. குறிப்பாக வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்திருப்பது மற்றும் இளைஞர்களின் குடும்ப அமைப்பு குறித்த மனப்போக்கு மாற்றங்கள் போன்றவை இந்த நிலைக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.
இந்த நிலைமை, ஜப்பான் எதிர்கொள்ளும் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சவால்களை மேலும் தீவிரப்படுத்தும் என்பதால், அரசுக்கு முக்கிய கவலையாக மாறியுள்ளது.





