என் தமிழ்

மலேசிய இந்து சங்கம் – சிலாங்கூர் மாநில 41வது ஆண்டு பொதுக்கூட்டம் : சமய, சமூகப் பணிகளில் புதிய முன்னேற்றம்

ஷா ஆலாம், 04 மே 2026 : மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 41வது ஆண்டு பொதுக்கூட்டம், மே 2ஆம் தேதி சுங்கை ரெங்கம் மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் 23 வட்டாரங்களைச் சேர்ந்த பேராளர்கள், சமயத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர்மணி அசோகன் மூக்கன் தனது உரையில், சங்கம் முன்னெடுத்து வரும் ஐந்து முக்கிய இலக்குகளை விளக்கினார். அதன் படி, 23 வட்டாரங்களின் கீழ் சுமார் 4,000 மாணவர்களுக்கு திருமுறை மற்றும் சமயக் கல்வி முறையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தரமான சமயக் கல்விக்காக ஆசிரியர் பயிற்சித் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகளில் சமயப் போதனைகள் நடைபெறுவதுடன், ஆலயப் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், சங்கத்திற்கான புதிய நிர்வாகக் கட்டிடத்தை அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்க பூஷன் தங்க கணேசன், ஆலயப் பிரச்சினைகளைத் தீர்க்க தரவுசேகரிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், அடுத்த ஆறு மாதங்களில் அவை நிறைவடைந்து அரசாங்கத்திடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மதமாற்றச் சவால்களை எதிர்கொள்ள “ஆலயம் செல்வோம்” மற்றும் “அட்சய பாத்திரம்” போன்ற திட்டங்கள் அவசியம் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சுவாமி மகேந்திரா குருக்கள், திரு ஆதிமூலம், திரு நடராஜன் கருப்பையா, திரு தமிழரசு சுப்ரமணியம் மற்றும் திரு செவ்வந்திலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சங்கத்தின் பணிகளைப் பாராட்டினர்.

மேலும், சமூக மற்றும் சமயத் துறைகளில் சிறந்து விளங்கிய 10 பேருக்கு ‘தொண்டர் மாமணி’, ‘தொண்டர்மணி’ மற்றும் ‘விவேக ரத்னா’ போன்ற விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

பொது விஷயங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 41வது ஆண்டு பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நிறைவுற்றது.

Scroll to Top