என் தமிழ்

வேளாண் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய பாதை அமைத்த KLSICCI

கோலாலம்பூர், 23 ஏப்ரல் 2026 :  கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (கேஎல்எஸ்ஐசிசிஐ), தனது வேளாண்மை (விவசாயம் மற்றும் கால்நடை) குழுவின் ஏற்பாட்டில் வேளாண் துறை மேம்பாட்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது. டாக்டர் குணாளன் சண்முகம் மற்றும் டத்தோ சாண்ட்ரா சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த அரை நாள் நிகழ்ச்சி, வேளாண் வணிகமயமாக்கல் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து தொழில்துறை தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களை ஒரே மேடையில் இணைத்தது.

கேஎல்எஸ்ஐசிசிஐ பயிற்சி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை துணைத் தலைவர் பிரபாகரன் வைத்திலிங்கம் தொடக்கி வைத்தார். வேளாண்மையை நவீனப்படுத்துவதும் தனியார் துறையின் பங்களிப்பை வலுப்படுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பிகேபிஎஸ் முன்னெடுப்புகள் குறித்த விளக்கமும், அக்ரோ வங்கியின் ஐ-சினார் நிதி திட்டம் தொடர்பான அறிமுகத்தையும் முகமட் அஸ்னென் பின் முகமட் தொங்காக் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் வேளாண் தொழில்துறையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்தனர். என்.பி ஆசியாவைச் சேர்ந்த நவநீத் பிள்ளை (அலெக்ஸ்), அன்னாசி மற்றும் தேங்காய் துறைகளில் தோட்ட மேலாண்மை மற்றும் மதிப்பூட்டப்பட்ட உற்பத்தி வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார். ஜேடிஎஸ் மாஜு ஜெயா நிறுவனத்தைச் சேர்ந்த தினேஷ் சுப்பையா, அதிக வருமானம் தரும் பணப்பயிர் வாய்ப்புகள் குறித்து பேசினார்.

சிலாங்கூர் பால்வள கூட்டுறவு பெர்ஹாட்டைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட விரும்புவோருக்கான நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கினார். அதேவேளை, ஜெயம் டெய்ரி டிரான்ஸ்ஃபர்மேஷனைச் சேர்ந்த டாக்டர் விஜயா ஜெயம், பால்வள உற்பத்தியை மேம்படுத்தும் நேப்பியர் புல் சாகுபடி மற்றும் சிலேஜ் உற்பத்தியின் வணிக வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.

டாக்டர் குணாளன் சண்முகம் வழிநடத்திய கலந்துரையாடல் அமர்வில், வேளாண் வணிகத்தில் புதுமை மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்வில் கவுன்சில் உறுப்பினர் பௌஸியா பிபி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன் கோவிந்தன் (ஷா ஆலம்), குணராஜ் முனியாண்டி (அம்பாங்) ஆகியோரும் பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இறுதியாக கௌரவ பொதுச் செயலாளர் மோகனா சின்னத்தம்பி நன்றி உரையாற்றி, வேளாண் துறையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Scroll to Top