கோலாலம்பூர், 25 ஏப்ரல் 2026 : இந்திய சமூகத்தினரின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தர உயர்வை நோக்கமாகக் கொண்ட ‘வெற்றி மடானி’ திட்டத் திருவிழாவை மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் இன்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி கந்தையா மண்டபத்தில் தொடக்கி வைத்தார்.
மனிதவள மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், “வெற்றி என்பது வெற்றியையும் நம்பிக்கையையும் குறிக்கும் சொல். ‘வெற்றி மடானி’ என்பது சாதாரண திட்டமல்ல; இந்திய சமூகத்தினரை திறன், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் மூலம் வலுப்படுத்தும் முயற்சி,” என்று தெரிவித்தார்.
ஒரு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் பேருக்கு பயன் கிடைக்கும் என அவர் கூறினார். தொழில்துறையின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பம், அரைக்கடத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்மதிப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வேலை செய்து வருபவர்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் தனித்தனி பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டு, திறன் மேம்பாடு, தொழில் முன்னேற்றம் மற்றும் எதிர்கால தயார்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு அரசுத் துறைகளின் கண்காட்சிப் பகுதிகளையும் அமைச்சர் மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, இந்திய சமூகத்தினருக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
“இது வெறும் வாய்ப்பு அல்ல, வெற்றிக்கான பாதை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ‘வெற்றி மடானி’ உங்களுக்காக உள்ளது,” என அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம், மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் அஸ்மான் முகமது யூசோப், அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்திய சமூக இளைஞர்களின் திறன் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முயற்சியாக ‘வெற்றி மடானி’ திட்டம் பாராட்டப்படுகிறது.








