சிலாங்கூர், 27 ஏப்ரல் 2026 : சிலாங்கூர் முக்குலத்தோர் சங்கத்தின் புதிய கட்டிடம் அமைப்பதற்கான நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சமூக ஒற்றுமை, பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு சமூகத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், “ஒரு சமூகத்தின் ஒற்றுமையே அதன் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம். தலைமுறை தலைமுறையாக வந்த நமது பாரம்பரியத்தைக் காத்து வளர்ப்பது நமது கடமை. நாம் இனம், மதம், சமூகவாரியாக வேறுபட்டிருந்தாலும், மொழிவாரியாக நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சங்கத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான முயற்சிக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த விருந்து, சமூக ஒற்றுமையையும் பண்பாட்டு மரபையும் முன்னிறுத்திய அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது. புதிய கட்டிடம் உருவாகுவதன் மூலம் சமூக நிகழ்வுகள், இளைஞர் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரு நிரந்தர மையம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்தொகையான நிதியுதவிகளை வழங்கி கட்டிட நிதிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு பங்களித்த அனைத்து நன்கொடையாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் சங்கம் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. சிலாங்கூர் முக்குலத்தோர் சங்கத்தின் புதிய கட்டிட நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சி, சமூக முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் புதிய ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாராட்டப்படுகிறது.







