கோலாலம்பூர், 27 ஏப்ரல் 2026 : நாடு முழுவதும் நடைபெறவுள்ள My Future Jobs 2026 வேலைவாய்ப்பு பயணத் தொடரின் மூலம் இந்த ஆண்டு 2 இலட்சம் வேலைவாய்ப்பு நியமனங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
துணை மனிதவள அமைச்சர் கைருள் ஃபிர்தவுஸ் அக்பார் கான் உடன் My Future Jobs பிரீமியம் வேலைவாய்ப்பு திருவிழா 2026 நிகழ்வை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை கூறினார்.
நேற்று தொடங்கிய இந்த வேலைவாய்ப்பு திருவிழா, இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த வேலைதேடுபவர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் போட்டித்தன்மை வாய்ந்த ஊதிய தொகுப்புகளுடன் வேலைவாய்ப்புகளை வழங்கியதோடு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக வேலை நியமனங்களும் வழங்கப்பட்டன.
நேற்று முதல் நடைபெற்றுவரும் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம் 800-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றிருப்பது, தொழிலாளர் தினம் 2026 கொண்டாட்டத்துடன் இணைந்த முக்கிய சாதனையாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது முதலாளிகளின் நம்பிக்கையையும் நாட்டின் தொழிலாளர் திறனையும் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சாதனையை தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெறும் மைவியூச்சர்ஜாப்ஸ் 2026 வேலைவாய்ப்பு பயணத் தொடரின் மூலம் இந்த ஆண்டு 2 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த முயற்சி தீபகற்ப மலேசியாவை மட்டும் மையப்படுத்தாமல், சபா மற்றும் சரவாக் மாநிலங்களையும் உள்ளடக்கி வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பு அணுகலை உறுதி செய்து, நாட்டின் மனிதவள முன்னேற்றத்தை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த திட்டம் அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.







