என் தமிழ்

ஐபிஎல் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவில் இலவச பயண வசதி

சென்னை, 25 ஏப்ரல் 2026 : சென்னை சூப்பர் கிங்ஸ்–குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக மெட்ரோ ரெயிலில் இலவச பயண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் CSK கிரிக்கெட் லிமிடெட் இணைந்து இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளன.

போட்டிக்கான டிஜிட்டல் அல்லது அச்சு நுழைவுச்சீட்டில் உள்ள QR குறியீட்டை பயன்படுத்தி, ரசிகர்கள் சென்னையின் எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் வரை கட்டணமின்றி பயணிக்கலாம். இந்த சலுகை ஒரு சுற்றுப்பயணத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நாளன்று ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ சேவைகள் சிறப்பு ஏற்பாடுகளுடன் இயக்கப்படவுள்ளதுடன், போட்டி முடிந்த பின்னரும் கூடுதல் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ரசிகர்கள் இந்த இலவச மெட்ரோ பயண வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Scroll to Top