புத்ரஜெயா, 25 ஏப்ரல் 2026 : புதிதாக பதவியேற்கவுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், அத்தியாவசிய சீர்திருத்தங்களை அமல்படுத்தி பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்துள்ளார்.
மே 13 முதல் பொறுப்பேற்கவுள்ள புதிய தலைமை ஆணையர், ஆணையத்தின் எதிர்கால தூரநோக்குப் பார்வையையும், MACC-யின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கவும், அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுக்கவும் மேற்கொள்ளவுள்ள சீர்திருத்தங்களுக்கான தெளிவான செயல்திட்டத்தையும் முன்வைக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.
பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அவரது உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், இதற்காக “கார்ப்பரேட் மாஃபியா” தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் முன்னாள் MACC தலைவர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான பங்கு வைத்திருப்பு சர்ச்சைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணைகளின் போது சில MACC அதிகாரிகள் பெருநிறுவன சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் ஆணையத்தின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்விவகாரங்கள் அச்சமோ பாரபட்சமோ இன்றி, தெளிவான காலக்கெடுவுடன் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
அசாம் பாக்கி தொடர்பான பங்கு உரிமை விவகாரத்தில், அமைச்சரவை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தபோதும் அது இன்னும் நிலுவையில் இருப்பது கவலைக்குரியது என கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். சட்டத்துறைத் தலைவரின் தலைமையிலான சிறப்பு குழு தனது அறிக்கையை அமைச்சரவைக்கு ஏற்கனவே சமர்ப்பித்துள்ள நிலையில், அந்த விவகாரத்துக்கும் விரைவில் முடிவு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய MACC தலைவரின் ஆரம்ப நடவடிக்கைகளே அவரது தலைமையின் திசையை நிர்ணயிக்கும் என்றும், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை வழியாக மட்டுமே உண்மையான சீர்திருத்தங்கள் தொடங்கியுள்ளன என்பதை மக்களுக்கு உணர்த்த முடியும் என்றும் அவர் கூறினார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், ஆணையத்தின் சுதந்திரத்தன்மையை பாதுகாக்கவும், இந்த முக்கிய பிரச்சினைகள் திறம்பட கையாளப்பட வேண்டும் என கோபிந்த் சிங் டியோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





