காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மிக பலத்த மழை பெய்ததால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது.
பலத்த தொடர் மழை காரணமாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் முற்றிலும் அழிந்த நிலைக்கு மாறியுள்ளன.
மழை வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி 200–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஏராளமானவர்களை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவித்தப்படி உள்ளனர். இன்று காலை வரை சுமார் 25 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மீட்புப் பணிகளில் சுமார் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் பல இடங்களில் 6 அடிக்கும் மேல் தேங்கி இருப்பதால், மீட்புப் பணிகள் மெல்ல நடந்து வருகிறது. ஸ்ரீநகரில் 20 கமாண்டோ படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தில் தவிப்பவர்களை மீட்கவும், நிவாரண பொருட்களை கொண்டு செல்லவும் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 45 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்கள் சுமார் 100 டன் மருந்து மற்றும் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் போட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவர்களின் உடமைகள் அனைத்தும் அழிந்து விட்டன. எனவே சுமார் 315 டன் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் போர்வைகள், 5 ஆயிரம் கூடாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
4 லட்சம் பால் பாக்கெட்டுகள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் ராணுவத்தின் பேஸ்புக், டுவிட்டர் இணையத்தளங்கள் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் 90 சதவீத ஊர்கள் வெள்ளம் சூழ்ந்து தனி தனி தீவுகள் போல மாறி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்த கிராமஙக்ளில் மின்சாரம், குடிநீர், தகவல் தொடர்பு எதுவும் இல்லை. இது மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.
வெள்ளம், நிலச்சரிவு காரணமாக சாலைகள் பயன்படுத்த முடியாதபடி மாறியுள்ளன. அவற்றை சீரமைக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
அது போல மீட்புப் பணிகளை முழுமையாக செய்து முடிக்க 10 நாட்கள் ஆகும் என்று ராணுவத்தினர் கணித்துள்ளனர். எனவே அதுவரை விமானத்தில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் முடிந்த பிறகும் மக்கள் சகஜ நிலைக்கு வர நீண்ட நாட்களாகும் என்று கருதப்படுகிறது.