கோலாலம்பூர், 19 ஏப்ரல் 2026 : 2026 ஏப்ரல் 18ஆம் தேதி, மலேசிய தேசிய இந்துத்தர்ம மாமன்றம் ஏற்பாடு செய்த “தமிழ்ப்புத்தாண்டு விழா – Tamizh Puthandu Fiesta 2026” கோலாலம்பூர் பிரிக்க்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
செய்த்ரல் ஸ்யூட்ஸ் (Sentral Suites), ஜாலான் துன் சம்பந்தன் முன்பாக நடைபெற்ற இந்த விழா, தமிழர் பண்பாடு, கலை மற்றும் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்புற அமைந்தது.
விழாவின் ஒரு பகுதியாக தமிழிசை கச்சேரி நடைபெற்றது. இதில் வீணை, கர்நாடக இசை, வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. மேலும், தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கண்காட்சி, கைவினை களஞ்சியம் போன்றவை பாரம்பரிய கலைநயத்தை எடுத்துக்காட்டின.
தமிழர்களின் நாட்டுப்புற பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கொலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் விழாவுக்கு வண்ணம் சேர்த்தன. பாரம்பரிய உணவுகள், சிற்றுண்டிகள் மற்றும் பானங்களின் 50க்கும் மேற்பட்ட வகைகள் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், பாரதநாட்டியம், சிலம்பம், உறுமி மேளம், பாரம்பரிய விளையாட்டுகள், உறியடி மற்றும் கோலம் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வை கூட்டரசு பிரதேச அமைச்சரான YB ஹன்னா யோ தொடங்கி வைத்தார். விழாவிற்கு RM30,000 நிதியுதவி வழங்கிய அவர், நிகழ்ச்சிகளில் வெளிப்பட்ட தமிழர் பண்பாட்டு செழுமையை பாராட்டினார். இந்த தமிழ்ப்புத்தாண்டு விழா, மலேசியாவில் தமிழர் பண்பாட்டை பேணிப் பாதுகாக்கும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.










