என் தமிழ்

உலக கலை தினம்: ஒற்றுமை மற்றும் தேசிய அடையாளத்திற்கு கலை முக்கியம்

கோலாலம்பூர், 15 ஏப்ரல் 2026 : வலுவான அடையாளத்துடன் கூடிய ஒன்றுபட்ட, நல்லிணக்கமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக விளங்கும் கலையைத் தொடர்ந்து போற்றவும், பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மனித நாகரிகத்தை வடிவமைப்பதிலும், உலகளாவிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும் கலை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூறினார்.

“ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தக் கொண்டாட்டம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதில் கலைஞர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கான ஒரு தளமாக மாறியுள்ளது,” என்று இன்றைய உலக கலை தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

படைப்பாற்றல், புதுமை மற்றும் பல்துறை சிந்தனையின் மேன்மையை அடையாளப்படுத்தும் மாபெரும் ஆளுமையான லியோனார்டோ டா வின்சியின் பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 15 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதாக டத்துக் ஆரோன் கூறினார்.

பின்னணி பேதமின்றி மக்களை ஒன்றிணைக்கக்கூடிய ஒரு உலகளாவிய மொழி கலை என்று கூறிய அவர், பாரம்பரிய நடனம், இசை, கைவினைப்பொருட்கள் மற்றும் நவீன காட்சி கலைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இனங்கள் மற்றும் துணை இனங்களிலிருந்து உருவாகும் மலேசியாவின் கலைகளின் பன்முகத்தன்மை, நாட்டின் அடையாளத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்றும் வலியுறுத்தினார். “கலை என்பது வேறுபாடுகளைக் கடந்து, பரஸ்பர மரியாதையை வளர்த்து, மக்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் ஒரு பாலம்,” என்று அவர் கூறினார்.

Scroll to Top