யான், ஏப்ரல் 9 – கடலோர மண்டல நீர்ப்பரப்பை ஆக்கிரமித்ததற்காக, மண்டலம் C-ஐச் சேர்ந்த 2.5 மில்லியன் ரிங்கிட் மொத்த மதிப்புள்ள மூன்று இழுவைப் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கெடா மாநில மீன்வளத் துறை இயக்குநர் சுக்ரி டெரிஸ் ஒரு அறிக்கையில், மூன்று படகுகளும் இங்குள்ள புலாவ் பிடானிலிருந்து ஆறு முதல் எட்டு கடல் மைல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக அறிவித்தார்.
மலேசிய மீன்வளத் தலைமை இயக்குநரின் அனுமதியின்றி, அந்தப் படகில் வெளிநாட்டுக் குழுவினர் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
“அருகிலுள்ள கடற்கரை அல்லது தீவிலிருந்து 15 கடல் மைல் தொலைவிற்குள் மீன் பிடிப்பதற்காக இயங்கும் உரிமத்தின் விதிமுறைகளை மீறியதற்காக, 1985 ஆம் ஆண்டு மீன்வளச் சட்டத்தின் பிரிவு 8 (b)-இன் கீழ் அந்த மூன்று படகுகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
“பறிமுதல் செய்யப்பட்ட மூன்று படகுகளும் மேலதிக விசாரணைக்காக கேளுஞ்சூர் மீன்வளப் பாதுகாப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்வள ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காக மலேசிய மீன்வளத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறும் எந்தவொரு தனிநபரிடமும் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப்படாது என்றும் சுக்ரி வலியுறுத்தினார்.
மீன்வளச் சட்டத்தின் கீழ் நிகழும் குற்றங்கள் தொடர்பான எந்தவொரு பொதுத் தகவலையும், 03-8888 5019 என்ற எண்ணில் உள்ள 24 மணி நேர FISHCOM புகார் தொடர்பு எண் மூலம் தெரிவிக்கலாம்.





