ஜார்ஜ் டவுன், 08 ஏப்ரல் 2026 : மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பினாங்கு மாநில அரசு, அம்மாநிலத்தின் தமிழ்ப் பள்ளி சிறப்புக் குழுவிற்கு 2.42 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள 28 தமிழ் தேசியப் பள்ளிகளுக்கான (SJKT) தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் சௌ கோன் இயோ தெரிவித்தார்.
மேலும், இளைய தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டிற்கான ஆரம்ப முதலீடாக, SJKT-யில் உள்ள 11 மழலையர் பள்ளிகளுக்கு RM194,400 வழங்கப்பட்டது. இந்த ஆண்டுப் பங்களிப்பில் எஸ்.ஜே.கே.டி, அதன் கீழ் உள்ள மழலையர் பள்ளிகள், அத்துடன் பஞ்சாபி மற்றும் தெலுங்கு கல்வி மையங்களும் அடங்கும்.
“பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும், கல்வி வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கும் உதவுவதற்காக 2.42 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். கொம்தாரில் SJKT-க்கு பினாங்கு மாநில அரசின் பங்களிப்பு ஒப்படைப்பு விழாவுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுந்தராஜூ மற்றும் பினாங்கின் இரண்டாம் துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதே நிகழ்வில், மூன்று பஞ்சாபி கல்வி மையங்களுக்கு RM120,000 ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு உள்ளிட்ட மாணவர் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தெலுங்கு சங்கத்திற்கு மேலும் RM30,000 வழங்கப்பட்டது.





