கோலாலம்பூர், ஏப்ரல் 8 – நாடு முழுவதும் உள்ள உறைவிடப் பள்ளிகளில் பாதுகாப்பின் அளவை மேம்படுத்தும் முயற்சியாக, மலேசியக் கல்வி அமைச்சு (MOE), 300 MySTEP பணியாளர்களை ஏப்ரல் 1, 2026 முதல் உதவி விடுதிக் காப்பாளர்களாக (MyPWA) நியமித்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் MyPWA முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சைடெக் தெரிவித்தார்.
விடுதி மாணவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வு எப்போதும் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, குறிப்பாக இரவு நேரக் கண்காணிப்பில், காப்பாளருக்கு உதவுவதில் உதவி காப்பாளர் முக்கியப் பங்கு வகிப்பார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பு சீர்திருத்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பின் செயலாக்கம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்,” என்று அவர் இன்று கூறினார்.
ஆசிரியர்கள் கற்பித்தல் மற்றும் கற்றல் (T&L) நடவடிக்கைகளில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மலேசியக் கல்வித் திட்டம் (RPM) 2026–2035-க்கு இந்த நடவடிக்கை இணக்கமாகவும் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். MyPWA-வின் நியமனம், பாதுகாப்பான மற்றும் உகந்த தங்குமிடச் சூழலை உருவாக்கி, அதன் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்று கல்வி அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.





