கோலாலம்பூர், 06 ஏப்ரல் 2026 : மலேசியாவில் செயல்படும் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான பேடிப்ஸ் நிறுவனம் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் பொதுக் காப்பீட்டு நிறுவனம் (மலேசியா) இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பயன்பெறும் வகையில் புதிய வணிக பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
மலேசியாவில் உள்ள மொத்த தொழில்களில் சுமார் 97 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களே ஆகும். இத்தொழில்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 39 சதவீதம் பங்களிப்பையும், மொத்த வேலைவாய்ப்பில் 48 சதவீதம் பங்களிப்பையும் வழங்குகின்றன. இருப்பினும் பல சிறு தொழில்களுக்கு போதுமான காப்பீட்டு பாதுகாப்பு இல்லாததால், எதிர்பாராத ஆபத்துகளுக்கு அவை எளிதில் பாதிக்கப்படுகின்றன.
இந்த புதிய கூட்டாண்மையின் கீழ், பேடிப்ஸ் வழங்கும் பணப்பரிவர்த்தனை கருவியுடன் காப்பீட்டு பாதுகாப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்கள் மின்னணு முறையில் பணம் பெறுவதுடன், தங்கள் தொழிலுக்கான அடிப்படை பாதுகாப்பையும் பெற முடியும்.
பேடிப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டீ கீன் காங் கூறுகையில், இன்றைய தொழில்களுக்கு வெறும் பணப்பரிவர்த்தனை சேவைகள் மட்டுமே போதாது. தொழில்கள் நிலைத்தன்மையுடன் வளர பாதுகாப்பும் அவசியம். அதனால் எங்கள் சேவையில் பாதுகாப்பு அம்சங்களையும் இணைத்து சிறு தொழில்களுக்கு உதவ முயல்கிறோம் என்றார்.
பல சிறு வணிகர்கள் காப்பீட்டு திட்டங்களை சிக்கலானதாக கருதி அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில், வணிகர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் பணப்பரிவர்த்தனை அமைப்பின் மூலம் காப்பீட்டை எளிதாக பெறும் வசதியை இந்த கூட்டாண்மை உருவாக்குகிறது.
கிரேட் ஈஸ்டர்ன் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெரமி யீப் கூறுகையில், சிறு தொழில்கள் மலேசியாவின் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக உள்ளன. ஆனால் பல தொழில்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. பேடிப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில்களின் தினசரி செயல்பாடுகளுக்குள் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் சிறு வணிகர்களுக்கு நம்பிக்கையுடன் தொழில் நடத்த உதவ முடிகிறது என்றார்.
இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரே தொகுப்பில் பல முக்கிய பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் தீ, வெள்ளம் அல்லது கொள்ளை போன்ற காரணங்களால் கடைக்கு ஏற்படும் சேதம், பணத்தை எடுத்துச் செல்லும் போது அல்லது கடையில் வைத்திருக்கும் போது ஏற்படும் இழப்பு, பணியாளர்களைச் சார்ந்த பொறுப்புகள் மற்றும் தொழில் செயல்பாடுகளை தற்காலிகமாக பாதிக்கும் எதிர்பாராத சம்பவங்கள் போன்றவை அடங்கும்.
இந்த திட்டத்தில் காப்பீட்டு வடிவமைப்பு, கண்காணிப்பு மற்றும் திட்ட நிர்வாக பொறுப்புகளை கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் மேற்கொள்கிறது. இதன் மூலம் இந்த திட்டம் நீண்டகாலமாக நிலைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்யப்படுகிறது.
மேலும், பணப்பரிவர்த்தனை, பணம் வழங்கல் மற்றும் தொழில் நிதி உதவி போன்ற சேவைகளை ஒருங்கிணைத்து சிறு தொழில்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் பேடிப்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சி சிறு வணிகங்களில் காப்பீட்டு பாதுகாப்பை அதிகரித்து, பாதுகாப்பு குறைவைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.





