குஜராத், 04 ஏப்ரல் 2026 : இந்தியாவுக்கு வரவிருந்த ‘பிங் ஷுன்’ என்ற கப்பல் திடீரென தனது பயணத்தை மாற்றி சீனாவை நோக்கிச் செல்கிறது. அமெரிக்காவின் பொருளாதார தடையில் உள்ள இந்த கப்பல், 6 லட்சம் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியாவுக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த கப்பல் இன்று (சனிக்கிழமை) குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை வந்தடைய வேண்டியிருந்தது. ஆனால், கப்பல் கண்காணிப்பு தரவு நிறுவனமான கெப்ளர் வெளியிட்ட தகவலின்படி, தற்போது இது சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இந்த திடீர் மாற்றத்திற்கான முக்கிய காரணமாக, ஈரான் எண்ணெய் விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடப்படுகிறது. பொதுவாக கச்சா எண்ணெய் வாங்கும் ஒப்பந்தங்களில், 30 முதல் 60 நாட்கள் கழித்து பணம் செலுத்துவது வழக்கமாக இருந்த நிலையில், இம்முறை முன்கூட்டியே கட்டணம் கோரப்பட்டதாக கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு ‘பிங் ஷுன்’ கப்பல் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இக்கப்பலில் உள்ள 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயின் மதிப்பு தற்போது சுமார் ரூ.600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.





