புத்ரஜெயா, 02 ஏப்ரல் 2026 : மேற்காசியாவில் நீடித்து வரும் மோதல், உலகளாவிய வழங்கல் சங்கிலி மற்றும் எரிசக்தி துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது மலேசியா நிலைநிறுத்தமாக இருந்தாலும், தற்போது புதிய மற்றும் சவாலான கட்டத்தை நாடு எதிர்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யவும், பொருளாதாரத்தை நிலைத்திருக்கவும், மக்களின் நலனை பாதுகாக்கவும் அரசு பல்வேறு முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்று, தொழில் துறை, மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. செலவுகளை குறைக்கும் முயற்சியாக கூட்டாட்சி அளவிலான ஹரி ராயா திறந்தவீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், BUDI95 திட்டத்தின் கீழ் டீசல் ஒதுக்கீடு தற்காலிகமாக மாதத்திற்கு 200 லிட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபா, சரவாக் மற்றும் லபுவான் பகுதிகளில் மானிய டீசல் நிரப்புதலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வீட்டிலிருந்து வேலை (BDR) முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதனுடன், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை குறைக்க ‘மக்கள் ஆதரவு’ திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 பில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தொடர்ந்து RON95 எரிபொருளை லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் பெற்றுவருகின்றனர். அதேவேளை, தொழில்துறை, மீனவர்கள் மற்றும் தகுதியான பிரிவுகளுக்கு டீசல் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, பல்வேறு எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்தும் முயற்சிகளும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், சிலர் தவறான தகவல்களை பரப்பி குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்கள் நாட்டின் நலனுக்கு எதிரானவை எனவும் கூறப்பட்டுள்ளது.
சவாலான இந்த சூழலில், பொதுமக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் பொருளாதார நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் உறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.





