வாஷிங்டன், 27 மார்ச் 2026 : வளைகுடா பிராந்தியத்தில் ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் உலகளவில் கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளன. இதனை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் அழுத்தம் விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா 15 அம்சங்களைக் கொண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இதில், ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குதல், அணுசக்தி திட்டத்தை கைவிடுதல், ஏவுகணை கட்டுப்பாடுகள், ஹார்முஸ் நீரிணையை திறத்தல் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்துதல் போன்றவை அடங்கும்.
ஆனால், இந்த திட்டத்தையும் பேச்சுவார்த்தையையும் ஈரான் மறுத்துள்ளது. இருந்தாலும், மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது என டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தம், ஈரானின் கோரிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





