கோலாலம்பூர்,25 மார்ச் 2026 : மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் அனைத்துப் பிரச்சனைகளும், அப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமைதியான வழிகளிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் மலேசியா உறுதியாக உள்ளது. மனிதாபிமானக் கோரிக்கைகள் மற்றும் உலகளாவிய நீதியின் கோட்பாடுகளுக்கு இணங்க, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு நாடுகளுக்கு இடையேயான உரையாடல், ராஜதந்திரம் மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பு ஆகியவையே சிறந்த அணுகுமுறைகள் என்று பிரதமர் டத்தோ செரி அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பஹ்ரைனின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் ஹமத் அல் கலீஃபா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) ஜனாதிபதி ஷேக் முகமது சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் இன்று தொலைபேசி உரையாடல் நடத்திய பின்னர், அவர் தனது முகநூல் பதிவில் இதைத் தெரிவித்தார்.
“தொடர்ந்து நிலவி வரும் பதட்டங்கள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் அவற்றின் தாக்கங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறேன். மேலும், அப்பகுதியில் நடந்த பதிலடித் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததைத் தவிர, இந்த உரையாடலைத் தொடர்ந்து பெருநாள் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, தத்தம் நாடுகளில் உள்ள மக்களின் நல்வாழ்வு, அமைதி மற்றும் செழிப்புக்காகவும் பிரார்த்தனை செய்ததாக அன்வர் கூறினார். முன்னதாக, டத்தோ செரி அன்வர் தனது ஜப்பானிய சகாவான சானே டகாயிச்சியுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றையும் நடத்தினார்.
இரு உலகத் தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் முன்னேற்றத்தைப் பாராட்டி மதிப்பீடு செய்தனர்.
இருதரப்பு ஒத்துழைப்பு மட்டுமின்றி, மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி குறித்து மலேசியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், உடனடி போர் நிறுத்தம் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
“மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்த மலேசியாவின் நிலைப்பாட்டை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அது, உடனடி போர் நிறுத்தம், பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் மோதலுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது,” என்று பிரதமர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவும் ஜப்பானும், விரிவான உத்திசார் கூட்டாண்மையை (CSP) வலுப்படுத்துவதன் மூலம், 1957 முதல் நிறுவப்பட்டுள்ள தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றன.
பிராந்திய மற்றும் உலக அளவில் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்வதில் ஆக்கப்பூர்வமான பங்கைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.





