புதுடெல்லி, 24 மார்ச் 2026 : மேற்கு ஆசியாவில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பு 53 லட்சம் டன்களுக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், அதை 65 லட்சம் டன்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஒரு தசாப்தத்தில் நாட்டின் சுத்திகரிப்பு திறனும் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார்.
நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கச்சா எண்ணெய் கையிருப்பு இந்தியாவிடம் போதுமானதாக உள்ளது என்றும், இதுகுறித்து மக்களுக்கும் உறுதியளிக்கிறார் என்றும் அவர் கூறினார்.
உலக வர்த்தகத்தில் முக்கிய பாதையாக விளங்கும் ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு தேவையான எரிசக்தி வளங்களை உலகின் எந்தப் பகுதிகளில் இருந்தும் பெற்றுவரும் முயற்சிகள் தொடரும் என்றும், சமீப நாட்களில் பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. ஏற்றிய கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.





