என் தமிழ்

அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசையில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

கராச்சி, 25 மார்ச் 2026 : 2025-ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக காற்று மாசடைந்த நாடுகள் பற்றிய தரவரிசையை சுவிட்சர்லாந்தை சேர்ந்த காற்று தர கண்காணிப்பு நிறுவனம் தனது ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வங்காளதேசம் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு கன மீட்டர் காற்றில் பிஎம்2.5 துகள்களின் அளவு 5 மைக்ரோ கிராமிற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த தரநிலையை 13 நாடுகள் மட்டுமே பின்பற்றுகின்றன.

2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 நாடுகளாக இருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆய்வு செய்யப்பட்ட 143 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 130 நாடுகள் WHO தரநிலையை பூர்த்தி செய்யத் தவறியுள்ளன. ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, எஸ்தோனியா மற்றும் பனாமா போன்ற நாடுகள் மட்டுமே இந்த வரம்பிற்குள் உள்ளன.

தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக லாவோஸ், கம்போடியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பிஎம்2.5 மாசுபாட்டை கணிசமாகக் குறைத்துள்ளன. மொத்தத்தில், 2025-ஆம் ஆண்டில் 75 நாடுகள் காற்று மாசுபாட்டை குறைத்துள்ளன; ஆனால் 54 நாடுகளில் மாசு அளவு அதிகரித்துள்ளது.

மேலும், சமீபத்தில் வெளியான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டிலும் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தது. 163 நாடுகளை உள்ளடக்கிய ஆய்வில், 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 1,139 மரணங்களும், 1,045 பயங்கரவாத சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், காற்று மாசுபாட்டிலும் பாகிஸ்தான் முதலிடம் பிடித்திருப்பது கவலைக்குரியதாக உள்ளது.

Scroll to Top