என் தமிழ்

சென்னை சூப்பர் கிங்ஸ் ரியூனியன் நிகழ்ச்சி: சுவாரசிய தருணங்கள் ரசிகர்களை கவர்ந்தன

சென்னை, 23 மார்ச் 2026 : 19வது ஐபிஎல் தொடர் வருகிற 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த சி.எஸ்.கே. அணியின் சார்பில் ‘ரோர் 26’ என்ற பெயரில் மெகா ரசிகர் விழா சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மஞ்சள் உடையில் திரண்டனர். தொடக்கமாக, தோனி மற்றும் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அதை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து, செல்போன்களில் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், மைக் ஹஸ்சி, டுவெய்ன் பிராவோ, முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், பத்ரிநாத், முரளி விஜய், ஜோகிந்தர் ஷர்மா, அம்பத்தி ராயுடு, எல். பாலாஜி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மைதானத்திற்குள் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

முன்னாள் மற்றும் நடப்பு வீரர்கள் இணைந்து காட்சி போட்டியில் கலகலப்பாக விளையாடினர். ஹஸ்சி அடித்த சிக்சர் மைதானத்தை அதிரவைத்தது. பிராவோ பேட்டிங் செய்யும் போது நடந்த நகைச்சுவை தருணங்கள் மற்றும் தோனியின் கீப்பிங் கலாட்டா ரசிகர்களை மகிழ்வித்தது.

மேலும், உலகக் கோப்பை வென்ற சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜூனியர் உலகக் கோப்பை வீரர் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நடிகர் சிவகார்த்திகேயனும் வீரர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியின் சிறப்பாக, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரி அரங்கேறியது. சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த விழாவை 23 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

மேலும், சி.எஸ்.கே. அறிமுகப்படுத்திய ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் மேத்யூ ஹைடன் மற்றும் சுரேஷ் ரெய்னா இணைக்கப்பட்டனர். இறுதியாக, ஏ.ஆர். ரஹ்மானுடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Scroll to Top