என் தமிழ்

ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி: லதா ரஜினிகாந்த் பதில்

சென்னை, 23 மார்ச் 2026 : தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர், ரஜினியை திமுக குடும்பம் மிரட்டி அரசியலுக்கு வரவிடவில்லை என்றும், பின்னர் அவர் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸில் நடிக்க சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் லதா ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது உண்மையல்ல. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று ரஜினி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். அதை பார்த்தாலே உண்மை தெரியும். தவறான கருத்துகள் அனைவரையும் பாதிக்கும்” என்றார்.

மேலும், “கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் இணையும் படம் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அது மிகவும் உற்சாகமான தருணமாக இருக்கும். ரஜினியின் நீண்ட சினிமா பயணம், அவரது கடின உழைப்பு, ரசிகர்களின் அன்பு மற்றும் இறைவனின் அருளால் தான் சாத்தியமாகியுள்ளது” என தெரிவித்தார்.

Scroll to Top