என் தமிழ்

‘எதிரிகள் அல்லாத நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும்’ – ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான், 23 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலடியாக, அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குகிறது.

மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த மோதலில், ஈரான் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை பெரிதும் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பை மீறியும், ஈரான் ஏவுகணைகள் தாக்கி வருவதால் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் சேதமடைந்துள்ளன.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தியதால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், “48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க வேண்டும்; இல்லையெனில் ஈரானின் மின் நிலையங்களை தாக்குவோம்” என்று அமெரிக்கா எச்சரித்தது.

இதற்கு பதிலளித்த ஈரான், தங்கள் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச கடல்சார் அமைப்பில் ஈரான் தூதர் அலி மவுசவி கூறுகையில், “ராஜதந்திரத்திற்கே முன்னுரிமை. ஆனால் ஆக்கிரமிப்பு நிறுத்தமும், பரஸ்பர நம்பிக்கையும் அவசியம். எதிரி நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்றவை பாதுகாப்புடன் பயணிக்கலாம்” என தெரிவித்தார்.

Scroll to Top