என் தமிழ்

அறிமுக போட்டியிலேயே சதம்: 15 வயதில் உலக சாதனை படைத்த வீராங்கனை

லாகோஸ்,, 22 மார்ச் 2026 : ருவாண்டாவை சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை பானி உடாகுஷிமனிந்தே, பெண்கள் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை எழுதியுள்ளார். அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நைஜீரியாவில் நடைபெற்ற இன்விடேஷனல் மகளிர் டி20 தொடரில் கானா அணிக்கு எதிராக விளையாடிய அவர், 65 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் அவுட் ஆகாமல் குவித்தார்.

இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை மட்டுமல்லாமல், குறைந்த வயதில் சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

முன்னதாக, டி20 அறிமுக போட்டியில் அதிகபட்சமாக கரன் ரோல்டன் 96* ரன்கள் எடுத்திருந்தார். மேலும், இளம் வயதில் சதம் அடித்த சாதனை ப்ரோஸ்கோவியா அலாகோ வசம் இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ருவாண்டா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் இலக்கைத் தொடர்ந்து விளையாடிய கானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ருவாண்டா அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Scroll to Top