என் தமிழ்

சிலாங்கூரில் எஸ்.ஜே.கே.டி. மாணவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சிறப்பாக நடைபெற்றது

சிலாங்கூர், 14 மார்ச் 2026 : சிலாங்கூர் மாநில எஸ்.ஜே.கே.டி. பள்ளி மாணவர்களுக்கான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கோப்பை மாநில அளவிலான சதுரங்கப் போட்டி 2026 சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் சனாசீ கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தார். அவருடன் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணனும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சதுரங்கம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிவாற்றலை மேம்படுத்தும் விளையாட்டாகும் என்று தெரிவித்தார். இந்த விளையாட்டு மாணவர்களின் சிந்தனை திறனை கூர்மையாக்குவதோடு ஒழுக்கத்தையும், தந்திரமான சிந்தனையையும் வளர்க்க உதவுகிறது என்றும் கூறினார்.

இந்திய மாணவர்கள் சிறுவயதிலிருந்தே சதுரங்கத்தில் ஆர்வம் கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய போட்டிகள் மாணவர்களுக்கு ஊக்கமளித்து, எதிர்காலத்தில் மலேசியாவிற்கு மேலும் பல திறமையான தொழில்முறை சதுரங்க வீரர்களை உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர், இத்தகைய போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று இளம் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Scroll to Top