என் தமிழ்

ஸ்லிம் ரிவர் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது

பேராக், 13 மார்ச் 2026 : தென்கிழக்கு ஆசியாவின் மகாலட்சுமி ஆலயம் எனப் புகழ்பெற்ற பேராக் மாநிலம் ஸ்லிம் ரிவரில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வில் மலேசியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 6,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சிறப்புப் பெற்றனர். நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பான தரிசன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில் மக்கள் கலைஞர் மற்றும் ஆன்மீகச் செம்மல் கவிமாறன், அம்பாங்கில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கர் திரு மடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரா, துரியன் துங்காலில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டதச பூஜை காளியம்மன் ஆலயத்தின் ஸ்தாபகர் அம்மா சுவாமி சண்முகநாதன், குவாலா சிலாங்கூரில் உள்ள சக்தி புறத்தின் ஸ்தாபகர் சுவாமி முத்துக்குமார் குருக்கள், மகிமா இயக்கத்தின் தலைவர் டத்தோ சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், டத்தோ ஆதி மற்றும் அவரது குடும்பத்தினரும், அரசியல் பிரமுகர்களும், சுற்றுவட்டார ஆலய நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். டான் ஸ்ரீ ராமசாமி குடும்பத்தினர் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

சிவ ஸ்ரீ மாறன் குருக்கள் தலைமையில் ஆலய திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகள் முறையாக நடைபெற்று நிறைவடைந்தன. இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகிகளின் பணியும் பக்தர்களால் பாராட்டப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மகாலட்சுமி அம்மனின் அருள் மற்றும் நல்லாசி கிடைக்கப் பெற்றதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Scroll to Top