புதுடெல்லி, 13 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த கடல்வழி பாதை மூலமாகவே நடைபெறுகிறது. இந்தியாவிற்கும் பெருமளவு கச்சா எண்ணெய் இந்த வழியே இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இந்தியாவில் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவி வருவதுடன், நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் நாடு முழுவதும் எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும், வதந்திகளை நம்பி தேவையற்ற அச்சத்தில் சிலிண்டர்கள் வாங்க மக்கள் குவிய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வழக்கம்போல வீடுகளுக்கு எந்த தடையும் இல்லாமல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளதாகவும், குறிப்பிட்ட துறை அல்லது பகுதிக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தீர்மானிக்கலாம் என்றும் கூறினார்.
அத்துடன், எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதும் விநியோகத்தை மேலும் விரிவுபடுத்துவதும் தொடர்பாக பெட்ரோலியத் துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.




